செவ்வாய், 30 நவம்பர், 2010

விருந்தோம்பல்


81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
  • இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
  • விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.
83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
  • விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்புற்றுக் கெட்டொழிவதில்லை.
84. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
  • மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
85. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
  • விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயண்படுத்தாமல் இருப்பானா?
86. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.
  • வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்று போற்றுவர்.
87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
  • விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.
88. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
  • செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும் போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தாமற் போயிற்றே என வருந்துவார்கள்.
89. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
  • விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
90. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
  • அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் பதிவுக்கு நன்றி.

உலாவுவோர்

பிரபலமான இடுகைகள்